அவிநாசி: அவிநாசி அருகே முருகம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் நடந்து வரும் பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்றனர்.முருகம்பாளையம் மாகாளியம்மன் கோவில் சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்றது. கோவிலில், பொங்கல் விழா, 25ம் தேதி, பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து துவங்கியது. அன்று இரவு, கிழக்கு பிள்ளையார் கோவிலிலிருந்து கும்பம் அலங்கரித்து அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.நேற்று முன் தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும், மாவிளக்கு எடுத்தலும் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.நேற்று கோவில் வளாகத்தில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதன்பின், பக்தர்கள் வேல் எடுத்து, சுவாமி மெரவனை நிகழ்ச்சியில், பிரகார உலாவாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில், நதிக்கரைக்கு கும்பம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.இன்று திருவிழா நிறைவாக மஞ்சள் நீராட்டு விழா பகல் 12:00 மணிக்கு நடக்கிறது.