பட்டிவீரன்பட்டி, சபரிமலையில் நேற்று முன் தினம் நடந்த மண்டல பூஜை விழாவில், மூலவருக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமந்து செல்லும் பாக்கியம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ராமையா 55வுக்கு கிடைத்தது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ராமையா. மண்டல, மகர விளக்கு காலத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் தங்கி 12 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார். இவரது பணியை பாராட்டி மண்டல பூஜையின் போது தங்க அங்கியை சுமந்து வரும் வாய்ப்பை அகில பாரத ஐயப்ப சேவை அமைப்பு இவருக்கு வழங்கி வருகிறது. நேற்று முன் தினமும் அப்பாச்சி மேட்டில் இருந்து சன்னிதானத்திற்கு அங்கி உள்ள பெட்டியை தலைச் சுமையாக கொண்டு சென்றார்.ராமையா கூறுகையில், ஆயுள் முழுவதும் இச்சேவையை செய்வேன். என்னுடன் விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில், நெல்லையைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோரும் சுமந்தனர் என்றார்.