புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியன்று, 15 ஆயிரம் பேருக்கு தலைவாழை இலை போட்டு, அறுசுவை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர பஞ்சமுக ஜெயமங்கள ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு, அனுமன் ஜெயந்தி மகோற்சவம் நேற்று துவங்கியது. நேற்று மாலை, பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாஹவாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகள் நடந்தது. மூலமந்திர ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை இன்று காலை துவங்குகிறது.வரும் 5ம் தேதியன்று, அனுமன் ஜெயந்தி மகோற்சவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8:30 மணிக்கு, 2 ஆயிரம் லிட்டர் பால், வாசனை திரவியங்களால், 36 அடி உயர ஆஞ்ஜநேய சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், வேத கோஷம், ஷோடச உபசாரம், லட்சார்ச்சனை பூர்த்தி நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு, சீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு, காலை 10:00 மணியில் இருந்து, மதியம் 1:00 மணி வரை, திரைப்பட பாடகர் மனோவின் இசைக் கச்சேரி நடக்கிறது. மதியம் 12:00 மணியளவில், 15 ஆயிரம் பக்தர்களுக்கு தலைவாழை இலை போட்டு, அறுசுவை உணவு பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.