பதிவு செய்த நாள்
05
ஜன
2019
03:01
சேக்கிழாரின் பெரிய புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, ராமசுவாமி சிவன் இயற்றிய பாடல்களைப் பாடினார், சுபா கணேசன். இவற்றைப் படைத்த ராமசுவாமி சிவனும், மஹா வைத்தியநாத சிவனும், சிவன் சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர் என்றார்.
சிவன் சகோதரர்கள் மும்மூர்த்திகளுக்குப் பின் தோன்றிய வாக்கேயக்காரர்களுக்குள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்களது முத்திரை, குஹதாஸ என்பது.இவர்களது தமிழ்ப்புலமை, இசைப்புலமை இரண்டையும், வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாராட்டியுள்ளார்.
ராமசுவாமி சிவனின் மற்ற படைப்புகள், இரட்டை மணிமாலை, திருவையாறு அந்தாதி, திருத்தொண்டர் போற்றிக் கலிவெண்பா, பிரகலாத சரித்திரம் மற்றும் சீதா கல்யாண க்ருதிகள் போன்றவை.ராமசுவாமி சிவன் பாடல்களாக எழுதியவை, பெரியபுராணத்தில் உள்ள சறுக்கங்களின் வரிசையைப் பின்பற்றி எழுதப்பட்டவை. அவற்றை அந்த வரிசையிலேயே பாடினார், சுபா கணேசன். ஒவ்வொரு பாடலுக்கு முன்னும், அது தெரிந்த ஒன்றாகவே இருப்பினும், அது சொல்ல வந்த கதையை, நமக்கு நினைவுபடுத்தும் வகையில், சிறிய உரை ஒன்றை அளித்தார். பாடல்களை நாம் அனுபவிக்க, இது ஏதுவாக அமைந்தது.
உதாரணத்திற்கு, தடுத்தாட்கொண்ட புராணத்தில், சிவபெருமான் நடத்திய திருவிளையாட லில், எவ்வாறு சுந்தரமூர்த்தி நாயனாரை வேதியர் வேடம் பூண்டு, அதட்டி, கல்யாணத்தை நிறுத்தினார் என்பதை விவரித்தார். இந்த இடத்தில் அதட்டிப் பேச, அடாணா ராகத்தை, ராமசுவாமி சிவன் தேர்ந்தெடுத்தது எவ்வளவு பொருத்தமானதாக இருந்திருக்கிறது, என்று வியந்தார் சுபா.
இவ்வாறு பல நுணுக்கமான ராகப் பொருத்தங்களையும், குறிப்புகளையும் மற்றும் பாடல் களிலுள்ள எதுகை மோனைகளின் அமைப்பு பற்றியும், மற்ற கவித்துவ விஷயங்களையும் அளித்தபடியே, மிகுந்த சுவாரசியத்துடன், பாடிப் பேசியது மெச்சும்படி இருந்தது. மற்றபடி இந்தக் கீர்த்தனைகளுக்கெல்லாம் ராகம், தாளம் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது. ஆனால், நொடேஷன் முறையில் ஸ்வரப்படுத்தப்படவில்லை என்ற தகவலையும் கொடுத்தார். இதன் காரணமாக தான், தன் முன்னோர்களிடமும் கேட்டு அனுபவித்துக் கற்றதை, கற்ற முறையில் ரசிகர்களுக்கு அளிப்பதாகவும் சொன்னார் சுபா.
பேசியபடியே பாடுவது, சுலபமான காரியமன்று. இவ்விரண்டையுமே திறம்படச் செய்து, வந்திருந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், சுபா கணேசன். பல வகையான ராகங்களை, கீர்த்தனைகளுடன் பொருந்தி, ராக ஸ்வரூபம் தோன்றும்படி அளித்தது, சங்கீதத்தில் இவர் தொட்டிருக்கும் எல்லையை, நமக்கு உணர்த்திச் சென்றது.வயலினில், மீரா சிவராமகிருஷ்ணனும், மிருதங்கத்தில், நெல்லை பாலாஜியும் உடன் வாசித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.- எஸ்.சிவகுமார்