பதிவு செய்த நாள்
06
ஜன
2019
02:01
திருப்பூர்:திருப்பூர் வீரபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நேற்று குண்டம் இறங்கி, வழிபட்டனர்.திருப்பூர் பி.என்.,ரோடு, ராமையா காலனியில் உள்ள வீரபத்ரகாளியம்மன் கோவிலில், மார்கழி மாதம் நடக்கும் குண்டம் பிரசித்தி பெற்றது. கோவிலின், 32ம் ஆண்டு குண்டம் திருவிழா, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தினமும், காளியம்மனுக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்து வந்தது.கடந்த, 3ம் தேதி, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, அம்மன் அழைத்து வருதல், மாலையில் திருவிளக்கு வழிபாடும் நடந்தது.குண்டம் இறங்கும் பக்தர்கள், கோவிலில் காப்பு கட்டிக்கொண்டனர்.நேற்று முன்தினம், குண்டம் திறக்கும் நிகழ்ச்சியும், முரசன்சாமி, வீரபத்ரகாளியம்மன் சிலைகளுக்கு, கனிமாலை மற்றும் மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, மேள, தாளத்துடன் நடந்தது. இரவில், அக்னி வளர்க்கப்பட்டு, நேற்று அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். விரதம் இருந்து, காப்புக்கட்டிய பக்தர்கள், குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுபூஜையும் நடைபெற உள்ளது.