சென்னை: சென்னையில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும், நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள், பல மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.
தமிழகம் மற்றும் கேரளாவில், மார்கழி மாதத்தில் அமாவாசை, மூல நட்சத்திரம் கூடிய நாளன்று, ஆஞ்சநேயர் கோவில்கள், வைணவக் கோவில்களிலும், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை, நங்கநல்லுாரில் உள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில், டிச., 27ம் தேதி முதல், நாளை வரை, சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு, 29ம் தேதி, 36 அடி உயர மூலவருக்கு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக, 36 கிலோ துாய சந்தனம் பெறப்பட்டு, அரைக்கப்பட்டது. இதையடுத்து, டிச., 31ல், லட்சார்ச்சனை நடந்தது.அனுமன் ஜெயந்தியான நேற்று, சுவாமிக்கு, ஏழு கால பூஜை, பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் நின்று, ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், லட்சுமிகாந்த பாரதி செய்திருந்தார். இன்று, லட்சார்ச்சனை பூர்த்தியுடன் உற்சவர் புறப்பாடு நடக்கிறது.அதேபோல், அசோக் நகர், மயிலாப்பூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களிலும், நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆஞ்சநேயருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.