குறுக்குத்துறை முருகன் கோயிலில் பத்ரதீப திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2012 11:02
திருநெல்வேலி : குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிமாத அமாவாசையை முன்னிட்டு பத்ரதீப திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நெல்லை குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான சுப்பிரமணியசுவாமி குகைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு பத்ரதீப திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. அன்று முதல் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு சுவாமி வீதிஉலாவும் நடந்தது. நேற்று முன்தினம் மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு 7 மணிக்கு சுவாமி வீதிஉலா நடந்தது. தொடர்ந்து வெள்ளி விளக்குகளில் அணையா தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு 7 மணிக்கு பத்ரதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் பத்ரதீபங்களை ஏற்றி சுவாமி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் முழுவதும் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டதால் கோயில் வளாகம் தீபங்களால் ஜொலித்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமி,அம்பாள் ரதவீதிஉலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.