பதிவு செய்த நாள்
22
பிப்
2012
11:02
பல்லடம் : பல்லடம் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்லடம் அங்காளம்மன் கோவில் 37வது குண்டம் திருவிழா, கடந்த 18ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 19ம் தேதி காலை 8.00 மணிக்கு கொடியேற்றம், இரவு 7.00 மணிக்கு யாகசாலை பூஜை, 10.00 மணிக்கு முகப்பள்ளம் மயான பூஜை நடந்தது. 20ம் தேதி சக்தி விந்தை தரிசனம், மாவிளக்கு, அக்னி குண்டம் வளர்த்தல், அம்மை அழைத்தல், திருக்கல்யாண உற்சவம், மகா சிவராத்திரி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 7.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அர்ச்சகர், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பயபக்தியுடன் 40 அடி நீளம், மூன்றடி அகலமுள்ள குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சில பக்தர்கள், தங்களின் குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். இன்று காலை 10.30 மணிக்கு கொடி இறக்குதல், இரவு 7.00 மணிக்கு மஹா அபிஷேகம், நள்ளிரவு மஞ்சள் நீராடல் , அம்பாள் வீதி உலா, பேச்சியம்மன் பூஜை, வசந்த விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.