பதிவு செய்த நாள்
25
ஜன
2019
10:01
மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது.
உலக உயிர்களின் நன்மைக்காகவும், கல்வி அறிவு பெருகவும் நடந்த இந்த விளக்கு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் 1980ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தை வெள்ளியை முன்னிட்டு இன்று (ஜன.,25) நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி இறுதி தேர்வு எழுதுவதற்கு முன், அனைவரும் சிறந்த
மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தை மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும், விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும் போது மாணவர்கள் நல்ல உடல்நிலை மற்றும்
சிறந்த மனநிலையுடன், படிக்க வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் ஒரு விளக்கு
பூஜையும் நடத்தப்படுகிறது. இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை விளக்கு பூஜை செய்வதினால் இறைவனின் அருள் கிடைப்பதுடன், கல்வி அறிவும், ஞாபக சக்தியும் பெருகுவதாக மாணவிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.