ஆதிசங்கரர் சிரகசன் என்னும் காபாலிகனுக்கு (நரபலி கொடுப்பவன்) நட்சத்திரக் கதை ஒன்றைச் சொன்னார். வேடன் ஒருவன் மானை விரட்டினான். பாய்ந்து சென்ற மானின் கொம்பு, கொடி ஒன்றில் சிக்கியது. வேடன் அதைக் கொல்ல முயன்ற போது கொஞ்சம் பொறு! என் மனைவியிடம் சொல்லி விட்டு வந்து உனக்கு உணவாகிறேன், என்றது. இரக்கம் கொண்ட வேடனும் அனுப்பி வைத்தான். சற்று நேரத்தில் ஆண் மானுடன் பெண் மானும் அதன் இருகுட்டிகளும் அவன் முன் வந்து நின்றன. ஒருவரை விட்டு ஒருவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எங்கள் நால்வரையும் ஒரே நேரத்தில் கொன்றுவிடு, என்று பெண்மான் வேடனிடம் சொன்னது. மிருகஜாதியிலும் கூட நாணயமும், பாசபந்தமும் இருப்பதை அறிந்த வேடன் மலைத்தான். அவனுள் இரக்கம் ஊற்றெடுத்தது. அம்பும், வில்லும் நழுவி விழுந்தன. இதைக் கண்ட சிவன், அம்பிகையோடு எழுந்தருளி வேடனுக்கு மோட்சமளித்தார். மான்களுக்கு நட்சத்திரப் பதவி அளித்தார். அவை வானமண்டலத்தில் மிருகசீரிடம் என்னும் நட்சத்திரமாகும் பேறு பெற்றன. இந்நட்சத்திரத் தொகுதியில் நான்கு நட்சத்திரங்கள் உள்ளன. மிருகசீரிட நட்சத்திரத்தினர் தங்களை வாக்குத் தவறாதவர்கள், எக்காரணத்தாலும் உயிருக்கு பயப்படாதவர்கள், பாசத்திற்கு கட்டுப்படுபவர்கள் என்பதை எண்ணி பெருமைப்படலாம்.