பதிவு செய்த நாள்
30
ஜன
2019
03:01
கோவை: எப்போதும் அன்பு, ஆனந்தம் நிறைந்த மனதோடு வாழுங்கள். இதனால், நாம் மகிழ்ச்சியாக இருப்பதோடு, நம்மை சுற்றி இருப்பவர்களும் ஆனந்தமாக இருப்பர், என, மாதா அமிர்தானந்தமயி கூறினார்.கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள, நல்லாம் பாளையம் அமிர்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பிரம்மஸ்தான கோவிலில், நேற்று 29 ல், காலை சிறப்பு பூஜையில் மாதா அமிர்தானந்தமயி பங்கேற்றார்.
இதன்பின், அவர் தன் ஆசியுரையில் கூறியதாவது:உலகம் வெகு வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. அதோடு சேர்ந்து, பயணிக்க வேண்டிய சூழல் அனைவருக்கும் ஏற்பட்டு விட்டது. ஆனால், உலகில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும், நாம் பிறர் மீது செலுத்தும் அன்பை குறைத்துக்கொள்ளக் கூடாது.ஒவ்வொருவரும் ஜாதி, மொழி, இன பாகுபாடு பாராமல், அன்பு செலுத்த வேண்டும். இவ்விஷயத்தில் நம் மனதில் வேறுபாடு தோன்றினால், நம் ஆற்றல் வீணாகிவிடும்.இந்த உலகை, மாசு இல்லாத, புனித பூமியாக மாற்றும் ஆற்றல் இயற்கைக்கு உள்ளது. அதை நாம் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இயற்கையை நாம் வெல்ல முடியாது என்பதை, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தி விட்டது.
கடமைகளை செய்வது நல்லது தான். அதே நேரத்தில், நம் சக மனிதர்களுடன் கலந்து உரையாடுவதையும், வாழ்க்கையில் அங்கமாக கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது, அவரவர் மனதில் தான் உள்ளது.தொழில்நுட்ப கருவிகளை, நம் வசதிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்; நாம் அவைகளுக்கு அடிமையாகி விடக் கூடாது.முன்கோபம், ஆத்திரம் கொள்ளாமல் எப்போதும் சூழ்நிலை அறிந்து, சிந்தித்து செயல்பட வேண்டும். இதனால் எந்த உறவையும் இழக்காமல், மகிழ்ச்சி யாக வாழலாம். நம் மனதுக்கு நல்ல எண்ணங்களே ஊட்டச்சத்து.கணவன் - மனைவி இருவரும் உண்மை, பரஸ்பர நம்பிக்கையோடு வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, அன்பு செலுத்த வேண்டும். இதனால் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.இவ்வாறு, மாதா அமிர்தானந்தமயி கூறினார்.