பதிவு செய்த நாள்
07
பிப்
2019
12:02
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஏழாவது நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. இதற்காக, அதிகாலை, உற்சவர் வீரராகவர், தேருக்கு எழுந்தருளினார். காலை, 7:00 மணியளவில் தேர் புறப்பாடு நடைபெற்றது.’ராகவா, கோவிந்தா, வீரராகவா’ என்ற சரண கோஷத்துடன், பக்தர்கள், ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் தேரை இழுத்து, நான்கு வீதிகளில் வலம் வந்தனர்.நான்கு வீதிகளிலும், திரளான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு, பூதேவி, ஸ்ரீதேவி சமேத வீரராகவரை தரிசித்தனர். பின், தேர் நிலைக்கு வந்தடைந்தது. அங்கு, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, பெருமாளை வழிபட்டனர்.தேரிலிருந்து எழுந்தருளிய பெருமாளுக்கு, இரவு திருமஞ்சனம் நடைபெற்றது. கோவிலுக்குள் பெருமாள் இரவு திரும்பினார்.தை பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான, இன்று மாலை, திருப்பாதம் சாடி திருமஞ்சனம், இரவு, குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.