பதிவு செய்த நாள்
07
பிப்
2019
01:02
பேரூர்: பூண்டி வெள்ளியங்கிரி மலையில் வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க, பக்தர்கள் வர துவங்கியுள்ளதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளில், கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும். கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது, பூண்டி வெள்ளியங்கிரிஆண்டவர் கோவில். இக்கோவில் மலை உச்சியில் வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க, பிப்., முதல், மே வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நடப்பாண்டு, கிரிவல காலம் துவங்கியுள்ளதால், கடந்த சனிக்கிழமை முதல், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, வர்த்தக நோக்கில், 60க்கும் மேற்பட்ட கடைகள் அனுமதிக்கப்பட்டன. டீ உள்ளிட்ட உணவு வரை விற்கப்பட்டன.கடந்தாண்டு எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள், சர்வசாதாரணமாக காணப்பட்டன. பீடி, சிகரெட் மற்றும் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டன. வனம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இந்தாண்டாவது வனம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பூண்டி கோவில் நிர்வாகத்துக்கு கடை, மூங்கில் குச்சிகள் வாயிலாக, பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தும், அடிப்படை வசதிகளில் அக்கறை காட்டுவதில்லை என, பக்தர்கள் புகார் கூறுகின்றனர். குடிநீர், கழிப்பிடம், பாதுகாப்பு வசதிகளை செய்வதுடன், விழாக்காலம் வரை, நிரந்தர மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.