பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மேற்கே பாலமலையில் உள்ள தென்திருப்பதி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மீதுள்ள அரங்கநாதர் கோவில் வைணவத்தின் முதன்மை குருவான ராமானுஜர் வந்து சேவித்த பெருமையுடையது. பழமையான இக்கோவில் தற்போது பெரும் பொருட்செலவில் புனரமைக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மஹா கும்பாபிஷேக விழா இன்று மாலை, 4:00 மணிக்கு ஆச்சார்ய வர்ணத்துடன் தொடங்குகிறது. நாளை திருப்பள்ளி எழுச்சி, வேதபாராயணங்கள், பெருமாள் யாகசாலையில் எழுந்தருளுதல், விமான கலச ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் ஆகியன நடக்கின்றன.ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணிக்கு காரமடை அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர் ஸ்வாமிகள் தலைமையில் மஹா கும்பாஷேகம் நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், வைணவ பண்டிதர்கள், பஜனை கோஷ்டியினர் கலந்து கொள்ள உள்ளனர். மூன்று நாட்களும் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.