நாகர்கோவில்: ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா வரும் 12ம் தேதி தொடங்குகிறது. லட்சக்கணக்கான பெண்கள் பொங்க கலிடும் நிகழ்ச்சி 20ம் தேதி நடைபெறுகிறது. ஆற்றுகால் கோயில் டிரஸ்ட் தலைவர் சந்திர சேகரபிள்ளை, விளம்பர கமிட்டி தலைவர் ஷோபா ஆகியோர் நாகர்கோவிலில் கூறியதாவது: தனது வெஞ்சினத்தால் மதுரையை எரித்த கண்ணகியை அமைதிப்படுத்த பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவதே ஆற்றுக்கால் பொங்கல் விழா.
இந்த ஆண்டு 12ம் தேதி இரவு 10:20 மணிக்கு அம்மனை காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. பூரம் நட்சத்திரமான 20ம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது. விழா தொடங்கிய நாள் முதல் கோயில் முன்புறம் உள்ள பந்தலில் கண்ணகி வரலாறு பற்றிய பாடல் பாடப்படுகிறது. 20ம் தேதி காலையில் பாண்டிய மன்னர் வதம் பாடி முடிக்கப்படடதும் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டதிரிபாடு கருவறையில் இருந்து தீபம் எடுத்து மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரியிடம் கொடுப்பார். தொடர்ந்து கோயில் அடுப்பில் பொங்கல் வைக்க தீ வளர்க்கப்படும். கோயில் முன்புறம் உள்ள பிரதான அடுப்பில் தீ மூட்டியதும் ஒலி பெருக்கியில் செண்டை மேளம் இசைக்கப்படும்.
தொடர்ந்து கோயிலை சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் உள்ள லட்சக்கணக்கான அடுப்புகளில் தீ மூட்டப்பட்டு பொங்கல் வைக்கப்படும். பகல் 2:15 மணிக்கு பூஜாரிகள் எல்லா பகுதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துவர். நிபந்தனைகள்: பொங்கல் விழாவில் பெண்கள் காட்டன் சேலைகள் மட்டுமே உடுத்த வேண்டும். பிளாஸ்டிக் கவர், கப்புகள் பயன்படுத்தக்கூடாது. சுட்ட செங்கல் மட்டுமே அடுப்பு கூட்ட பயன்படுத்த வேண்டும். 3ம் திருவிழா முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான குத்தியோட்ட விரதம் தொடங்குகிறது. 900 சிறுவர்கள் வரை இதில் பங்கேற்பர். பொங்கல் முடிந்த பின்னர் அம்மன் யானை மீது எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21ம் தேதி குருதிதர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறும். புதிய சாதனை: 1997 பிப்., 23ம் தேதி நடைபெற்ற பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு கின்னஸ் புத்தகத்தில் ஆற்றுக்கால் பொங்கல் விழா இடம் பெற்றது. 2009ல் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டு மீண்டும் கின்னசில் இடம் பெற்றது. இந்த ஆண்டு அந்த சாதனையை முறியடித்து மீண்டும் கின்னசில் இடம் பெற முயற்சி நடைபெறுகிறது. 12ம் தேதி, விழாவின் தொடக்கமாக கலாசார நிகழ்ச்சிகளை நடிகர் மம்முட்டி தொடங்கி வைக்கிறார். முதல்வர் பினராயி விஜயன் கோயிலுக்கு வந்து ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.