பதிவு செய்த நாள்
23
பிப்
2019
04:02
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரன்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவ பெருமான், அகோரமூர்த்தி, ஆதிநடராஜர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகும். இக்கோயிலில் உள்ள மூன்று தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்திரப்பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மூன்று தேர்களில் எழுந்தருள திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக கலெக்டர் சுரேஷ்குமார், போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேர் நான்கு மாடவீதிகளையும் வலம்வந்தது.