பதிவு செய்த நாள்
25
பிப்
2019
11:02
பண்ருட்டி: திருக்கோவிலுார் தேகளீச பெருமாள்– வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் பண்ருட்டியில், நேற்று நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த தேகளீச பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக, தங்க பல்லக்கில், கடந்த 14ம் தேதி திருக்கோவிலுாரில் இருந்து புறப்பட்டு, பண்ருட்டி வழியாக கடந்த 19ம் தேதி கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசிமக மகோற்சவத்தில் பங்கேற்றார்.
பின் கடலுாரில் இருந்து புறப்பட்டு, 22ம் தேதி, பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் இரவு தங்கினார். நேற்றுமுன்தினம்( 23ம் தேதி) காலை மேலப்பாளையம் பகுதியிலும், மதியம் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில், உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் மாலை 6:00 மணிக்கு பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில், தேகளீச பெருமாள், ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக வந்தடைந்தார். அங்கு உற்சவர் தேகளீச பெருமாளுக்கும், ஸ்ரீதேவி. பூமிதேவிக்கும், பண்ருட்டி வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருக்கல்யாண உற்சவம் இரவு 8:30 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று 24ம் தேதி புறப்பட்ட உற்சவர் தேகளீச பெருமாள் புதுப்பேட்டை, சேமங்களம், அரசூர், மா.புத்துார், திருவெண்ணைநல்லுார், புதுப்பாளையம் வழியாக திருக்கோவிலுாருக்கு வரும் 27 ம்தேதி சென்றடைகிறார்.