விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள ஐயனார் கோவில் குளம் பராமரிப்பின்றி புதர் மண்டி பொலிவிழந்து காணப்படுகிறது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் மற்றும் ஐய்யனார் கோவில் உள்ளது. ஆஞ்சநேயர் கோவில் பின்புறத்தில், ஐயனார் கோவில் குளம் உள்ளது.
இந்த குளத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை லட்சதீப விழாவின் போது, இந்த குளத்தில் தெப்பல் விடுவது வழக்கம். விழாவின்போது, குளத்தை சுத்தம் செய்து, அதில் தண்ணீர் நிரம்பி தெப்பல் உற்சவம் நடைபெறும். இந்நிலையில், ஐயனார் கோவில் குளம் தற்போது தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால், குளத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி பொலிவிழந்து காணப்படுகிறது. குளத்தில் உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.