பதிவு செய்த நாள்
07
மார்
2019
03:03
குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவிலில் நேற்று (மார்ச்., 6ல்) ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழாவில் நேற்று (மார்ச்., 6ல்), முதலாவதாக தலைமை பூசாரி சதாசிவம் தீர்த்தக்குடத்துடன் தீ மிதித்தார். அப்போது, அவர் நடந்து செல்லும் முன்பே பாதத்தடம் பதிந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி, என, சரண கோஷமிட்டனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர். 6:00 மணிக்கு துவங்கிய குண்டம் விழா, 11:00 மணிக்கு நிறைவு பெற்றது.
குண்டம் இறங்கும் பக்தர்களின் வசதிக்காக முதன்முதலாக, திருப்பதியில் தரிசனம் செய்வது போல் டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், பக்தர்கள் தள்ளு முள்ளு இல்லாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து அமைதியான முறையில் குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறை வேற்றினர். 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
மாலையில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று (மார்ச்., 7ல்) காலை, 8:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், 10:00 மணிக்கு தேர்த்திருவிழா, இரவு, 7:00 மணிக்கு வண்டி வேடிக்கை நடைபெறவுள்ளது. நாளை (மார்ச்., 8ல்) காலை தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் கோவிந்தராஜ் செய்திருந்தார்.