பதிவு செய்த நாள்
12
மார்
2019
11:03
கோத்தகிரி: கோத்தகிரி திம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள உச்சன காளியம்மன் கோவில் திருவிழா, எட்டூர் கிராம மக்கள் சார்பில், சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோத்தகிரி திம்பட்டி கிராமத்தில், பழமை வாய்ந்த உச்சனகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக் கோவிலில், திம்பட்டி, கடக்கோடு, மேல் அணையட்டி, கீழ் அணையட்டி, சாமில்திட்டு, கன்னேரிமுக்கு, அளியூர், கப்பட்டி, கம்பட்டி, நாரகிரி, குனியட்டி, கெச்சிகட்டி, ஜக்கலோடை மற்றும் தாலோரை உள்ளிட்ட, குக்கிராமங்களுக்கு உட்பட்ட, எட்டூர் மக்கள் சார்பில், ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, கடந்த, 26ல் விழா துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நாள்தோறும் ஒவ்வொரு கிராமமாக அம்மனின் ஊர்வலம் நடந்தது. இறுதியாக, திம்பட்டி கிராம உச்சனகாளியம்மன் கோவிலுக்கு அம்மன் மீண்டும் அழைத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோவிலில் அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. நேர்த்தி கடன் செலுத்தப்பட்ட பின், பக்தர்கள், கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, ஆடுபலியிடப்பட்டு, பக்தர்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பினர்.இவ்விழாவில், திம்பட்டி எட்டூர் கிராமத்திற்கு உட்பட்ட, குக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.