பதிவு செய்த நாள்
16
மார்
2019
01:03
மேட்டுப்பாளையம்: கற்கள் இல்லாததால், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் பாதியில் முட்கியுள்ளன.கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, கடைகள் ஏலம் விடுவதன் மூலம் ஆண்டுக்கு, ஏழு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைக்கிறது.
இது மிகவும் பழமையான கோவில் என்பதால், கோபுரம் அமைக்கும்படி பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்து சமய அறநிலையத்துறை, 3.40 கோடி ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட அனுமதி வழங்கியது. இதையடுத்து, 2017ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் துவங்கின.பேஸ் மட்டம் முடிந்து கல்காரப்பணிகளுக்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராசிபுரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து வடிவமைக்கப்பட்ட கற்கள் வாங்கி வந்து பணிகள் செய்தனர். தற்போது கற்கள் வரத்து இல்லாததால், கடந்த நான்கு மாதங்களாக பணிகள் ஏதும் செய்யாத நிலையில் கோபுரப்பணிகள் பாதியில் நின்றுள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், பாதியில் நிற்கும் ராஜகோபுரத்தைக் கண்டு கலங்குகின்றனர். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில், ராஜகோபுர கல்காரப் பணிகளுக்கு தேவையான கற்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் வெட்டி எடுத்து வடிவமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் பணிகள் துவங்கும், என்றார்.