பதிவு செய்த நாள்
20
மார்
2019
01:03
மேட்டுப்பாளையம் : மிகவும் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை
செலுத்தினர்.மேட்டுப்பாளையம் -- ஊட்டி மெயின் ரோடு, காந்தி மைதானத்தில் மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு கடந்த, 5ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங்கியது. 12ம் தேதி கம்பம் நடுதலும், 14ல் கொடியேற்றமும், 18ல் குண்டம் திறப்பும், தேர்க்கலச பூஜையும் நடந்தன.நேற்று (மார்ச்., 19ல்) காலை, 9:00 மணிக்கு பவானி ஆற்றில், பக்தர்கள் அலகு குத்தி, அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, 9:30 மணிக்கு தலைமை பூசாரி மோகன்குமார் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பூப்பந்தை உருட்டி விட்டு, முதலில் குண்டத்தில் இறங்கினார்.
அதைத்தொடர்ந்து, உதவி பூசாரிகள், ஆண், பெண், சிறுவர், சிறுமியர், கைக்குழந்தையுடன் ஆண்கள், பெண்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை
செலுத்தினர்.பின்பு சுவாமிக்கு அலங்கார பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. தன்னார்வ அமைப்பினர் பக்தர்களுக்கு, அன்னதானம், நீர்மோர், கம்மங்கூழ் ஆகியவை வழங்கினர்.
இன்று (மார்ச்., 20ல்) மாலையில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், 4:30 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளன. நாளை (21ம் தேதி) அம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும், 22ல் மாலை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதலும், 24 ம் தேதி ராமசாமி நகர் மாகாளியம்மன் கோவிலில் இருந்து அம்மனுக்கு பால்குடங்கள் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.