பதிவு செய்த நாள்
20
மார்
2019
01:03
ராயபுரம்:ராயபுரத்தில் உள்ள பாழடைந்த தர்மராஜா கோவிலில் இருந்து, மூன்று ஐம்போன் சிலைகள் திருடிய வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, ராயபுரம், செட்டித்தோட்டம் குடிசை பகுதியில், சுவாமி சிலை கிடப்பதாக, 14ம் தேதி, ராயபுரம்
போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.உதவி கமிஷனர், தினகரன் தலைமையிலான போலீசார், 3 அடி உயரமுள்ள, 60 கிலோ எடை கொண்ட, ஐம்பொன் அர்ஜுனன் சிலையை மீட்டனர்.
இதுகுறித்து, சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கும், இந்து அறநிலையத் துறை
அதிகாரிகளுக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை பார்வையிட்ட அதிகாரிகள், ஐம்பொன் சிலை என்பதை உறுதி செய்தனர்.இவ்வழக்கில், ராயபுரத்தில் குப்பை சேகரிக்கும் கணேசன், 25 என்பவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், ராயபுரம், எம்.எஸ்.கோவில் தெருவில் உள்ள, பாழடைந்த கோவிலில் இருந்த, இரண்டரை அடி உயரமும், 30 கிலோ எடையுள்ள, திரவுபதி சிலையை திருடியது தெரியவந்தது.
கணேசனின் கூட்டாளி, திருவொற்றியூர், கன்னி கோவில் தெருவைச் சேர்ந்த மணி, 28 என்பவனை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், அதே கோவிலில் இருந்து, 2 அடி
உயரம், 20 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை கடத்தி, விற்பனை செய்வதற்காக, எர்ணாவூரில் உள்ள ஒரு கடையில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து, அர்ஜுனன், திரவுபதி, விநாயகர் ஆகிய ஐம்பொன் சிலைகளை மீட்டனர்.
கைப்பற்றப்பட்ட மூன்று சிலைகளையும், போலீசார், ஐகோர்ட்டில் ஒப்படைத்தனர்.