பதிவு செய்த நாள்
20
மார்
2019
02:03
திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவில் தெப்ப உற்சவம், இன்று (மார்ச்., 20ல்) நடக்கிறது. மலைக்கோட்டைக்கு மேற்கே, பிரம்ம தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. கரிகால் சோழனால், 611 அடி நீளத்திலும், 330 அடி அகலத்திலும் அமைக்கப்பட்ட இந்த தெப்பக்குளத்தில் நடுவே, 16ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கர் என்பவரால் அழகிய நீராழி மண்டபம் கட்டப்பட்டது.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்தக் குளத்தில் மட்டுவார் குழலம்மை, தாயுமானவ சுவாமிகள் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவம் கடந்த 12ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இன்று (மார்ச்., 20ல்) இரவு, 7:00 மணிக்கு, தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்காக, தெப்பக் குளத்தை சுத்தம் செய்து, காவி மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தெப்பம் தயார் செய்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முடிந்துள்ளது.
பிளாஸ்டிக் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தெப்பத் தேர் முழுவதும், பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.