மதுரை சித்திரை திருவிழாவிற்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2019 11:03
மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் 38 லட்சம் ரூபாயில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 8 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஏப்ரல் 15 பட்டாபிஷேகம், 16 திக்குவிஜயம், 17 திருக்கல்யாணம், 18 தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 19 கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மாநகராட்சி 29, 31 முதல் 36 மற்றும் 43 வது வார்டுகளில் 7 லட்சம் ரூபாயில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. 36வது வார்டில் செம்மண், கிரவல் மண் பரப்புவது, தடுப்பு வேலிகள் அமைப்பது, வைகை ஆற்றுப்படுகையில் தண்ணீர் தொட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு 31.95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இப்பணிகளுடன் நான்கு மாசி வீதிகளிலும் ரோடுகள் தற்காலிகமாக சீரமைக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும், என்றனர்.