பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
சேலம்: பங்குனி உத்திரத்தையொட்டி, முருகன் கோவில்களில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம், குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், கடந்த, 15ல், பங்குனி உத்திர உற்சவம் தொடங்கியது. நேற்று (மார்ச்., 21ல்) காலை, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள், காவடியாட்டம் ஆடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானையுடன், ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவில், சண்முக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், தனித்தனி சன்னதிகளில் உள்ள, மூலவர் சவுந்தரராஜர், சவுந்திரவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில், பெருமாளுடன், தாயாரை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, சேர்த்தி சேவை உற்சவம் நடந்தது.
ஊத்துமலை முருகன் கோவிலில், பாலசுப்ரமணியர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெரமனூர் கந்தசாமி கோவிலில், வள்ளி, முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சேலம் அருகே, காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில், மூலவர் கந்தசாமிக்கு, 16 வகை
மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்து, தங்க கவசத்தில் அருள்பாலித்தார். அதேபோல், ஏற்காடு, அடிவாரம் ஆறுபடை முருகன்; பேர்லேண்ட்ஸ் முருகன்; செவ்வாய்ப்பேட்டை
சித்திரைச்சாவடி முருகன், ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமம்; கந்தாஸ்ரமம்; இடைப்பாடி, கவுண்டம்பட்டி, முத்துக்குமார சுவாமி; இளம்பிள்ளை
பாலசுப்ரமணியர்; மகுடஞ்சாவடி சுப்ரமணியர்; மேட்டூர், தங்கமாபுரிபட்டணம், முருகன் உள்ளிட்ட, மாவட்டத்திலுள்ள முருகன் கோவில்களில், பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று (மார்ச்., 21ல்) காலை, 6:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேக பூஜை, மாலை, 50 அடி உயர திருத்தேரை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழாக்குழுவினர், பக்தர்கள் இணைந்து, வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.