ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா துவங்கியுள்ளதால் கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.
இங்கு கொடியேறிய நிலையில் உள்ளூர் மட்டுமின்றி சுற்று கிராமங்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் கோயிலுக்கு தரிசனம் செய்யவருகின்றனர். கோயிலை சுற்றிய பொதுநடைபாதைகளில் தாறுமாறாக நிறுத்தபடும் வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு வந்து செல்ல முடியவில்லை. திருவிழா முடியும் வரை கோயிலின் மேல் மற்றும் கீழ்புறம் நிறுத்தபடும் லோடுவேன்களை தற்காலிக இடமாற்றம் செய்து அப்பகுதிகளில் பக்தர்களின் டூவீலர்கள் நிறுத்தினால் கோயிலை சுற்றி நிலவும் நெருக்கடி குறையும். கோயில் மைதானத்தில் பக்தர்கள் வந்து செல்லும் வகையில் அகலமான நடைபாதை இல்லாததால் பக்தர்கள் சிரமமடைகின்றனர். இதையும் ஒழுங்குபடுத்தவேண்டும்.கோயிலை சுற்றிய பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து , பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு வந்து செல்ல வழிவகை செய்யவேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.