சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு நடந்த கயர்குத்து திருவிழாவில் பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்தினர்.
சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப்பொங்கல் விழா கடந்த மாதம் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவில் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கயர்குத்து விழா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி வரைந்து கையில் வேப்பிலையுடனும், வேப்பிலை ஆடை அணிந்து வந்தும் வழிபாடு செய்தனர். விழவையொட்டி சிவகாசியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. 10 ம் நாளான நாளை தேரோட்டம், மறுநாள் நாளில் தெப்போற்சவம் நடக்கிறது.