பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
01:04
மதுரை : சதுரகிரி, சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலை செங்குத்தானது. அடிவாரத்தில் இருந்து, 12 கி.மீ., மலை உச்சியில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன.அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே, கோவிலுக்கு மலையேறி செல்ல, வனத்துறை அனுமதியளிக்கிறது.
ஆடி அமாவாசை அன்று, பக்தர்கள் அதிகம் கூடுவர்.நீண்ட சிரமத்துக்கு இடையே, சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தனியார் மடங்கள் மூலம், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி, அறநிலையத்துறை, ஏழு மடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி மறுத்தது.மடங்களில் ஊற்று நீரை சேமித்து வைத்து, சமையல் செய்து வந்தனர். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு மடங்கள் பாடுபட்டு வருகின்றன. பல ஆயிரம் பேருக்கு, பசியாற்றும் சேவையை செய்கின்றனர்; குடிநீர் வழங்குகின்றனர்.மடத்தின் உழவாரப் பணியாளர்கள், கழிப்பறைகளை சுத்தம் செய்து, துாய்மையை பேணுகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அறநிலையத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு, மடங்களில் அன்னதானம் வழங்க தடை விதித்திருப்பது, பக்தர்கள், ஹிந்து அமைப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன் கூறியதாவது: கோவில் பகுதியில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சந்தன மகாலிங்கம் கோவிலில் அபிஷேகம் செய்யக்கூட தண்ணீர் இல்லை.
பிலாவடி கருப்பு கோவில் அருகே கிணற்றை ஆழப்படுத்த, வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.கோவில் வளாகத்தில், தனியார் ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கப்படாது. கட்டுமான பணி உட்பட முறைகேடுகள் நடக்கவில்லை. தண்ணீர் பிரச்னை முடிவுக்கு வந்தால், மடங்களில் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படும்.அதுவரை அறநிலையத்துறை சார்பில் கோவிலில் புளியோதரை, தயிர்சாதம், பொங்கல் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.