பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
05:04
மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் கோயிலில் நடைபெற்ற திருமுலைப்பால் விழாவில் பக்தர்கள் பழம், பால் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என குரு லிங்க சங்கமம் ஆக மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். சீர்காழியில் சிவபாத இருதயர்- பகவதி அம்மையாருக்கு மக னாகப் பிறந்தவர் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர். இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்துள்ளார். தந்தை இவ ரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு நீராட சென்றார். அப்போது திருஞான சம்பந்தருக்கு பசி ஏற்பட அம்மா அப்பா என அழுதார்.
இவரது அழுகுரல் கேட்ட சிவபெருமான் பார்வ தியைநோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் திருஞான சம்பந்தருக்கு காட்சி கொடுத்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த ஞான சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்துவிட்டார். குளித்துவிட்டு வந்த தந்தை யார் பால் கொடுத்தது? யார் கொடுத்தாலும் வாங்கி விடுவதா? என குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கி உள்ளார். அப்போது ஞானசம்பந்தர் சிவனும், பார்வதியும் காட்சி கொடுத்த திசைகாட்டி தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பாடலைப் பாடினார். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் இந்த கோவிலில் திருமுலைப்பால் விழாவாக நடத்தப்படுவது வழக்கம்.
இவ்வாண்டு திருமுலைப்பால் விழா இன்று மதியம் தருமை ஆதினம் 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞான சம்பந்தப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஓதுவார்கள் தேவாரம் பாட திருஞானசம்பந்தர் பல்லக்கில் பிரம்ம தீர்த்தக் கரைக்கு எழுந்தருளினார். மதியம் ஒரு மணிக்கு தருமை ஆதீனம் முன்னிலையில் உமையம்மை புஷ்ப பல்ல க்கில் வந்து பிரம்ம தீர்த்தக் கரையில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு தங்க கின்னத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளி திருஞான சம்பந்தருக்கு காட்சியளித்தனர். அப்போது சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. விழா வில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலா, வாழை, பேரிச்சை பழங்களுடன் சர்க்கரை கலந்த பாலை சுவாமி, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து குழந்தைகள் ஞானம் பெற பிரார்த்தனை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.