அருப்புக்கோட்டை: கடவுளை துதித்து செய்கின்ற செயல்கள் எல்லாம் நல்லபடியாக முடியும். பிரச்னைகளை தீர்க்கும் வல்லவன் இறைவன். கடவுளை நம்பி செயல்பட்டால் வாழ்வில் நல்லது நடக்கும். மனிதன் தன்னால் தாங்க முடியாத, தீர்க்க முடியாத பிரச்னைகள் வரும் போது தான் கடவுளை தேடி ஓடுகிறான்.
மனித வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்றிருந்தாலும் குழந்தை பேறு இல்லாமல் வாழ்க்கை முழுமையானதாக இருக்காது. நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் உள்ள அம்மன் கோயில் எதிர்புறம் உள்ள சப்பாணி சுவாமி குழந்தை பேற்றை நிறைவேற்றுகிறார். ரோட்டின் ஓரத்தில் உருளை வடிவத்தில் இருப்பவர் தான் சப்பாணி சுவாமி. இந்த இடத்தில் இவர் உருவாகி 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்கின்றனர் இப்பகுதியை சேர்ந்த வயதானவர்கள். கேட்ட வரம் கை கூடும் என்பதில் எவ்வித ஐயமில்லை.
குழவி கல் ரூபத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் அம்மன் முன்பாக தெருக்களில் உருண்டு பாதுகாப்பிற்கு செல்லுமாம் சப்பாணி சுவாமி என்பது அந்த கால புராண வரலாறு. குழந்தை வரம் வேண்டி வருபவர்கள், வாகனம் வாங்கியோர் இங்கு வந்து பூஜை செய்து விட்டு செல்வது வழக்கம். குழந்தை பிறந்த உடன் இங்கு வந்து சுவாமியின் காலடியில் வைத்து வணங்கி நன்றி செலுத்துகின்றனர் .