பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
12:04
எண்ணுார் : பர்மா நகர், பீலிக்கான் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் வளாகத்தில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட, நவக்கிரஹ சன்னிதி, நாகாத்தமனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. எண்ணுார், பர்மா நகரில் உள்ள, பீலிக்கான் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில், புதிதாக நவகிரஹ சன்னிதி, நவக்கிரஹ சுவாமிகள், நாகாத்தம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜை, கோ பூஜை போன்றவை நடைபெற்றன.
தொடர்ந்து, புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, நவக்கிரஹ சுவாமிகளுக்கும், நாகாத்தம்மனுக்கும், புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ஓம் சக்தி... பராசக்தி என, விண்ணதிர முழங்கினர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பெண்களின் நகைகள் திருட்டு போகாதவாறு, சேப்டி பின் பெண் காவலர்களால், வழங்கப்பட்டன. இக்கோவிலின், 53ம் ஆண்டு, தீ மிதித் திருவிழாவும், நேற்று மாலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. பர்மா நகர் தீ மிதித் திருவிழா, வடசென்னையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.