பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
குன்னூர்: குன்னூர் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. குன்னூரில், 1965ல் சுயம்பு லிங்கம் இருந்த இடத்தில், சங்கர சுவாமி தலைமையில், பீடம் அமைத்து ஐயப்பன் வழிபாடு துவங்கியது. 1966ல் மூலஸ்தானம் அமைத்து, 1967ல் பதினெட்டாம் படி கட்டி முடிக்கப்பட்டது.
1986ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து கோவிலில் கேரள ஆசார முறைப்படி பிரம்ம தரணநெல்லூர் பத்மநாபனுண்ணி நம்பூதிரிபாடு ஆணையின் பேரில்,பூஜை ஆராதனைகள் நடந்து வருகிறது.
கோவிலில் தற்போது கணபதி, மகா விஷ்ணு, துர்கையம்மன், சுப்ரமணியர், சிவன், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகள் புனரமைப்பு பணியுடன் மண்டப பணிகள் நிறைவு
பெற்றன.நேற்று முன்தினம் (மே., 9ல்) ஆச்சார்ய வர்ணம், முளைப்பாரியிடுதல், அத்தாழபூஜை, அஸ்தர கலச பூஜை, ராக்ஷோகன ஹோமம், வாஸ்து ஹோமம், புண்யாகம், பல்வேறு ஹோமம், பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து நேற்று (மே., 10ல்) காலை, 10:00 மணியளவில், தந்திரி தரண நெல்லூர் பத்மநாபனுண்ணி நம்பூதிரிபாடு தலைமையில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. செண்டை மேளங்கள் முழங்க வெடி நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து, திரவிய கலச பூஜை, அதிவாச ஹோமம், கலசாதி வாசம், மகா தீபாராதனை, ஆகியவை நடந்தன. இன்று (மே., 11ல்) சாஸ்தாவுக்கு அதிவாசம் பூஜை, பரி கலசாபிஷேகம், பிரம்ம கலசாபிஷேகம் ஆகியவை நடக்கிறது. நாளை (மே., 12ல்) காலை திருவிளக்கு பூஜை, மாலை, 3:00 மணிக்கு ஐயப்ப சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்தாபகர் குருசாமி சங்கர் சுவாமி, ஐயப்ப பக்த சங்கத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.