பதிவு செய்த நாள்
12
மே
2019
03:05
ஓசூர் : கோதண்டராமர் சிலையின் பயணத்திற்காக, கெலவரப்பள்ளி அணையில் இருந்து, திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம், ஈஜிபுரா பகுதிக்கு, திருவண்ணாமலையில் இருந்து, கோதண்டராமர் சிலை, கார்கோ லாரியில் எடுத்து செல்லப்படுகிறது. பிப்ரவரி மாதம் துவங்கிய பயணம், பல்வேறு தடைகளை கடந்து, மே, 9ல், ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளிக்கு வந்தது. இங்குள்ள தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில், 350 டன் எடைக்கு மேல் உள்ள கோதண்டராமர் சிலையை எடுத்து செல்ல முடியாது என்பதால், ஆற்றின் குறுக்கே, தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், இரு நாட்களாக, பேரண்டப்பள்ளியில் கோதண்டராமர் சிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரைகளிலும், மண்ணை கொட்டி, தற்காலிக சாலை அமைத்த நிலையில், மைய பகுதியில் மட்டும் தண்ணீர் செல்ல வசதியாக, மண்ணை கொட்டாமல் நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் வரை, வினாடிக்கு, 160 கன அடி தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் சென்றதால், தற்காலிக சாலையை முழுவதுமாக முடிக்க முடியவில்லை.
சிலையை எடுத்துச் செல்லும் குழு, பொதுப்பணித் துறை உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மேல், கெலவரப்பள்ளி அணையில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான, 44.28 அடியில், 41.98 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், ஒரு நாள் வரை மட்டுமே, தண்ணீரை நிறுத்தி வைக்க முடியும்.