பதிவு செய்த நாள்
16
மே
2019
12:05
சிவகங்கை: சிவகங்கை தேவஸ்தானம் காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்திரநாயகி வைகாசி திருவிழாவின் 7 ம் நாளான நேற்று வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் பிள்ளை வரம் தரும் ‘பொய்பிள்ளை மெய்பிள்ளை’ சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக நேற்று சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் இருந்து சுவாமி அம்பாள், சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஷ்வரரின் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் எழுந்தருளிய சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் மரப்பொம்மை, சண்டிகேஷ்வர் ருத்ர தீர்த்தம் ஆடினர்.
குழந்தை வேண்டி பொம்மை பூஜை: பின் பூஜித்த தவழும் குழந்தை வடிவ மண் பொம்மையை கோயிலுக்கு வந்த புதுமண தம்பதி, குழந்தை வரம் வேண்டி வந்த பெண்களுக்கு வழங்கினர். இப்பொம்மையை பெற்று செல்லும் பெண்கள் பூஜை அறையில் பொம்மையை வைத்து தினமும் பூஜித்து வரவேண்டும். ஒரு ஆண்டிற்குள் குழந்தை பிறந்ததும், அடுத்த வைகாசி விழாவின் போது புதிய தவழும் குழந்தை மண் பொம்மைகளை பிள்ளை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு வழங்கி நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்வர். இந்த பொம்மையை பெறும் ‘பொய்பிள்ளை மெய்பிள்ளை’ பூஜை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தவழும் குழந்தை வடிவ மண் பொம்மைகளை பெற்று, வாள்மேல் நடந்த அம்மனை தரிசனம் செய்தனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் பங்கேற்றனர்.
நுாற்றாண்டு கண்ட பூஜை: காளையார்கோவில், வாள்மேல் நடந்த அம்மன் கோயில் பூஜாரி வி.இளம்வழுதி கூறியதாவது:வைகாசி 7 ம் நாள் விழாவில் சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவள்ளி அம்மன் இக்கோயிலில் எழுந்தருளி, தெப்பத்தில் ருத்ர தீர்த்தகம் ஆடியதும், தவழும் குழந்தை வடிவ மண்பொம்மை பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறை மன்னர்கள் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. அவற்றை பெற்று செல்லும் பெண்களுக்கு அம்மனின் அருளால் அடுத்த ஆண்டிற்குள் குழந்தை பிறக்கும். இந்த நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்யவே, அடுத்த ஆண்டில் புதிய பொம்மைகளை வாங்கி வந்து மற்ற பெண்களுக்கு வழங்குவர். அம்மனை வழிபட்டால் திருமணம், தொழில் தடை அகன்று, குடும்பம் வளரும்.
நிச்சயம் குழந்தை கிடைக்கும்: சென்னையை சேர்ந்த பக்தர் டி.மனீஷா கூறியதாவது: சென்னையில் வசிக்கிறோம். காளையார்கோவிலை சேர்ந்த உறவினர்கள் வாள்மேல் நடந்த அம்மனின் சிறப்பு பற்றி கூறினர். குறிப்பாக பிள்ளை வரம் வேண்டி பொம்மை பெற்று சென்றால், அடுத்த ஆண்டிலேயே பிறக்கும் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது என தெரிவித்தனர். அதன்படி தவழும் குழந்தை வடிவ மண் பொம்மையை பெற்று செல்கிறேன். அம்மனை தரிசனம் செய்ததில் சந்தோஷமாக உள்ளது. பிள்ளை வரம் வேண்டி இந்த பொம்மையை பெற்று சென்று பூஜித்து வந்தால் நிச்சயம் குழந்தை கிடைக்கும், என்றார்.