பதிவு செய்த நாள்
17
மே
2019
12:05
மதுரை, மதுரையில் மழை மற்றும் மக்கள் நலன் வேண்டி அகில பாரத துறவியர்கள் சங்கம், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு குழு சார்பில் சிம்மக்கல் கல்பாலம் அருகே வைகை தீர்த்தக் கிணறு அருகே சிறப்பு வருண பூஜை, ஹோமம் நடந்தது.
ஆலய பாதுகாப்பு குழு மாவட்ட தலைவர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். அகில பாரத துறவிகள் சங்கத்தின் சுவாமி ராமானந்தா ஆசி வழங்கினார். குழுவின் மாநில அமைப்பாளர் சுடலைமணி கூறியதாவது: வற்றாத கங்கைக்கு இணையானது வைகை. ஜூலை 24 முதல் ஆக., 4 வரை வைகை பெருவிழா நடக்கவுள்ளது. வைகையின் புனிதம் காக்க வலியுறுத்தி ஆற்றின் இருபுறங்களிலுள்ள 150 கிராமங்களில் தேனி வருஷநாடு துவங்கி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் ஆத்தங்கரை வரை ஒரே நேரத்தில் சிறப்பு பூஜை, யாகம் நடக்கிறது என்றார்.பா.ஜ., நகர் தலைவர் சசிராமன், குழு மாவட்ட செயலாளர் சிவக்குமார், வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் ராஜன், வி.எச்.பி., மாவட்ட தலைவர் கிரி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் அர்ச்சுணன், அமைப்பாளர்கள் கார்த்திக், ராம்ஜி பங்கேற்றனர். துணை தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.