காரைக்காலில் மழை வேண்டி சனீஸ்வரர் கோவிலில் வர்ணஜபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2019 01:05
காரைக்கால்: காரைக்காலில் மழை வேண்டி திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் வர்ணஜப பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் காவிரியின் கடைமடை பகுதியாக உள்ளது. பருவ மழை பொய்த்தல், உரிய நேரத்தில் காவிரி நீர் வராதது உள்ளிட்டவற்றால் விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் சார்பில், மழை வேண்டி நேற்று வர்ண ஜப பூஜை நடந்தது. இதற்காக, சங்க மண்டபத்தில் அருள் பாலிக்கும் நந்திகேஸ்வரர் சிலையைச் சுற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. விக்னேஸ்வர பூஜையுடன் வர்ணஜபம் துவங்கியது. பல்வேறு திரவியங்களால் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கலச அபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் கூறுகையில். ‘வறட்சி நீங்கி, விவசாயம் வளம் பெறவும், உலக நன்மை வேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கடும் வறட்சி நிலவியபோது இது போல் பூஜை செய்த பின், மழை பெய்தது’ என்றார்.