ஆச்சாரியார்கள் நுனியில் முடிச்சுடன் மூங்கில் கம்பு வைத்திருப்பதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2012 04:03
இதற்கு யோகதண்டம் என்று பெயர். நுனியில் உள்ள முடிச்சை ஞானக்ரந்தி என்பர். அதாவது எது உண்மையான இன்பம் என்று தெரியாமல், அறியாமையினால் மனித வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது. இக்கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நமக்கு நல்லறிவு வேண்டும். ஒரு மரத்திலிருந்து நேரடியாக பழம் கிடைப்பதில்லை. முதலில் மொட்டு, இரண்டாவது மலர், மூன்றாவது காய், நான்காவது பழம் கிடைக்கிறது. நல்லறிவு என்பது பழம் போன்றது. அது உடனே கிடைத்துவிடாது. முதலில் நல்லோர் சேர்க்கை. இரண்டாவது அவர்கள் காட்டிய வழியில் திருக்கோயில் வழிபாடு. மூன்றாவது நல்லறிவு புகட்டும் நூல்களைப் படித்தும், நல்லோர்களின் உபதேசங்களைப் பெற்றும் குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்டு பரந்த மனப்பான்மையும், தர்ம சிந்தனையையும் அடைதலாகிய யோக நிலை. யோகம் என்றால் கண்மூடி தியானத்திலிருப்பது மட்டுமல்ல. தாழ்ந்த நிலையிலிருக்கும் நம்மை மகான்களுக்கு இணையாக உயர்த்திக் கொள்வதும் யோக நிலை தான். இம்மூன்றும் ஒழுங்காக அமைந்தால் அதாவது மொட்டு, மலர், காய் மூன்றும் சரியாக இருந்தால் பழமாகி விடுவது போல், நாமும் உண்மையான ஞான முதிர்ச்சி ஏற்பட்டு உண்மையான மகிழ்ச்சியுடன் வாழலாம். ஆசார்யர்களை தரிசித்தால் நம் நிலையும் உயர்ந்து, நல்லறிவு பெற்று இன்பமாய் வாழலாம் என்பதை உணர்த்துவது தான், யோக தண்டமும், ஞான முடிச்சுமாகும்.