பதிவு செய்த நாள்
23
மே
2019
02:05
காஞ்சிபுரம்: கடந்த, 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, காஞ்சிபுரம் சுரகேஸ்வரர் கோவிலில், 47 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, திருப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில் அமைந்துள்ளது, சுரகேஸ்வரர் கோவில். பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மனால், 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இக்கோவில் கும்பாபிஷேகம், 1972ல், ஜூன், 28ல் நடந்தது.
இதையடுத்து, 47 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கோவில் விமானம் மற்றும் பிற சன்னிதிகளில் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.இது குறித்து, இந்தியதொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர், தி.சரவணன் கூறியதாவது: கும்பாபிஷேக திருப்பணிகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஆண்டு துவங்கியது.
பழமை மாறாமல் இருக்க, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் ஆகிய இயற்கை கலவை மூலம், தொல்லியல் துறையின், மாடுலர் எனப்படும், ஸ்தபதி மூலம், கோபுரங்கள் பராமரிப்பு உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கின்றன. ராஜகோபுரத்தை உரசும்படி உயர்அழுத்த மின்வடம் சென்றதால், ராஜகோபுரம் திருப்பணி துவங்க தாமதம் ஆனது.தற்போது, உயர் அழுத்த மின்தடம் அகற்றப்பட்டுள்ளதால், ராஜகோபுரம் சீரமைப்பு பணி, 10 நாட்களில் துவங்க உள்ளது.சீரமைப்பு பணி நிறைவு பெற்றவுடன், ஆகஸ்ட் மாதத்தில், கும்பாபிஷேகம்
நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.