திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2019 11:05
மதுரை : -திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுர வாசலை திறக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ராஜகோபுரம் கீழ் உள்ள வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் சில ஜோதிடர்களின் சொல்படி கேட்டு, சில அரசியல் வாதிகள் தங்களின் அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில், 1988 முதல் ராஜகோபுர வாயில் வழியாக பக்தர்கள் செல்வதை தடை செய்தனர். அவ்வாயில் நிரந்தரமாக மூடப்பட்டது.
இதனால் ஆகம விதிகள், நடைமுறைகளுக்கு மாறாக பின்னோக்கிய முறையில் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ராஜகோபுர வாயில் திறக்கப்படும்பட்சத்தில், திருவிழாக் காலங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க அவசியமில்லை.எந்த ஒரு கோயிலிலும் ராஜகோபுர வாயில் வழியாகச் சென்று, மூலவரை தரிசனம் செய்வதுதான் முறை. கம்பீர தோற்றம் கொண்ட பிரதான ராஜகோபுர வாசலை திறக்கக்கோரி அறநிலையத்துறை செயலாளர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நாராயணன் மனு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி அமர்வு அறநிலையத்துறை செயலாளர், கமிஷனர், திருச்செந்தூர் கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.