பதிவு செய்த நாள்
02
ஜூலை
2019
05:07
நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமா, “தந்தையே! சொர்க்கத்தில் நுழையும் முதல் பெண் யார்?” எனக் கேட்டார். “சொர்க்கத்தின் தலைவி நீ தான் என்றாலும், உனக்கு முன்பாக விறகு வெட்டும் தொழிலாளி ஒருவரின் மனைவி அங்கு நுழைவார்” என்றார். “ யார்?” என மகள் கேட்க, “உன் வீட்டுக்கு அருகிலுள்ளவர் தான்” என அப்பெண்ணை அடையாளம் காட்டினார். தன்னை விட அவரிடம் என்ன சிறப்பு உள்ளது என்பதை அறிய பாத்திமா அவளின் வீட்டுக்குச் சென்றார். கதவைத் தட்டி, “நான் தான் நபியின் மகள் பாத்திமா. தங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன்” என்றார். இறைத்தூதரின் மகள் வீட்டு வாசலில் நிற்பதை அறிந்தும் அப்பெண் வரவில்லை. உள்ளிருந்தபடி, “அம்மா! இறைத்தூதர் மகளான தங்களைக் காண எனக்கும் ஆசை தான். இருப்பினும் என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், கதவைத் திறக்க அனுமதி இல்லை. நாளை நீங்கள் வருவதாக இருந்தால், கணவரிடம் அனுமதி பெற்று வைக்கிறேன்” என்றாள்.
மறுநாள் பாத்திமா தன் புதல்வர்களான ஹசன், ஹுசைன் ஆகியோருடன் சென்றார். கதவைத்தட்டி, “நான் பாத்திமா, என் புதல்வர்களுடன் வந்துள்ளேன்” என்றார். உள்ளிருந்தபடி, “ என்னை மன்னியுங்கள் அம்மா! தங்களைக் காண மட்டுமே கணவரிடம் அனுமதி பெற்றேன். தங்கள் புதல்வர்களைக் காண அனுமதியில்லை” என்றார். மறுநாள் பாத்திமா தனியாகச் சென்றார். கதவைத் திறந்தாள் அந்த பெண். இருவரும் சற்று நேரம் உரையாடினர். தொழுகை நேரம் வந்ததும் தொழ ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் பாத்திமா ஓரமாக அமர்ந்தார். அந்தப் பெண்ணோ, “எல்லாம் வல்ல இறைவா! என் சேவை எனது கணவருக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும். அவருக்கு ஆயுள்பலம், தேகபலம் தர வேண்டும்” என கண்ணீர் மல்க வேண்டினார். இதுபற்றி தந்தையிடம் தெரிவித்த போது, “பாத்திமா! அப்பெண் தன் கணவர் மீது கொண்ட மரியாதையையும், அன்பையும் கண்டாயா? இப்படிப்பட்ட பண்புகளே பெண்ணுக்கு பெருமை தரும். சொர்க்கத்தில் அவள் முதலில் நுழைய, நீ இரண்டாவதாக நுழைவாய்,” என்றார் நாயகம்.