பதிவு செய்த நாள்
03
ஜூலை
2019
02:07
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் பக்தர்கள், ஆடைகளை விட்டுச் செல்ல தடை அமலுக்கு வந்தது. திருநள்ளாரில் தர்பாரண் யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. சனி பரிகார தலமாக விளங்குவதால், நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர்.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், சனிப்பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். பக்தர்கள், அங்குள்ள நளன் குளத்தில் நீராடி, ஆடைகளை குளத்தி லேயே கழற்றி விட்டு, புதிய ஆடை அணிந்து, சனீஸ்வர பகவானை தரிசிக்க செல்வர்.
பக்தர்கள் விட்டுச் செல்லும் ஆடைகளால், குளத்து நீர் மாசுபடுகிறது. அந்த ஆடைகளை சேகரித்து அகற்ற வேண்டி உள்ளதுடன், வாரம் ஒரு முறை குளத்தின் நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி, புதிதாக நீர் நிரப்ப வேண்டி உள்ளது.இவற்றை தவிர்க்கவும், பக்தர்கள் நலன் கருதியும், குளத்தில் ஆடைகளை விட்டுச்செல்ல, கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இந்த தடை, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.மேலும், குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில், பக்தர்கள் தங்கள் ஆடைகளை விட்டுச் செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.