பதிவு செய்த நாள்
04
ஜூலை
2019
12:07
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
உடுமலை, தளி ரோடு செங்குளம் அருகே, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், முழுவதும் கற்கோவிலாக கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளிலும், நம்பெருமாள் அவதார மூர்த்திகளான, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ விஷ்வக்ஷேனர், ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்களும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளுகின்றனர்.
கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள், கடந்த, 30ம் தேதி துவங்கின. தினமும், காலை, மாலை என யாக சாலை பூஜைகள் நடந்து வருகின்றன.நேற்று, யாக சாலை பூஜைகளும், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீ வேங்கடேசபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தன. பால், நெய், தேன், இளநீர் என பல்வேறு திரவியங்களில், வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. மாலை, தங்க கவச அலங்காரத்தில், எம்பெருமாள் விஸ்வரூப தரிசனம் வழங்கினார். ஸ்ரீ பத்மாவதி தாயார் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதே போல் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சிவப்பு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இன்று காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், நிறை வேள்வி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு மற்றும் சிம்ம லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில், ஸ்ரீ ரங்கம், ஸ்ரீமுஷ்ணம் மகா தேசிய சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்துார் 24 வது பட்டம், ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர், ஸ்ரீமத் அகோபில மடம் ராஜகோபாலன் மற்றும் தாமல் ஸ்ரீராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். குறை ஒன்றுமில்லாத கோவிந்தா என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. கும்பாபிஷேக வர்ணனையை ஆன்மிக சொற்பொழிவாளர் குரு சுபாஷ் சந்திர போஸ் நிகழ்த்துகிறார். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கின்றன. தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.