பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
01:07
சேலம்: சேலத்தில், நேற்று புரிஜகன்னாதர் ரத யாத்திரையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒடிசா மாநிலத்தின், புரியில் ஆண்டுதோறும் ஆடி, 2ம் நாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது.
ரதத்தில் கிருஷ்ணர் ஜகன்னாதராகவும், தன்னுடைய சகோதரர் பலராமர், தங்கை சுபத்ராவுடன் தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புரி நகருக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக, இஸ்கான் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில், புரிஜகன்னாதர் ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று கருப்பூர் இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில், சேலத்தில் புரிஜகன்னாதர் ரத யாத்திரை நடந்தது. நேற்று மாலை, சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே துவங்கிய ரதத்தில் ஜகன்னாதர், பலராமர், சுபத்ரா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே துவங்கிய ரதயாத்திரை, கோட்டை மைதானம், ஜவுளிக்கடை, குகை, தாதகாப்பட்டி வழியாக சீலநாயக்கன்பட்டி சந்திரமஹாலில் நிறைவடைந்தது. ரத யாத்திரை சென்ற இடங்களில், வழிபட்ட மக்களுக்கு இஸ்கான் சார்பில் லட்டு உள்ளிட்ட இனிப்பு பலகாரங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து சந்திரமஹாலில், பஜனை, உபன்யாசம், நாடகம், ஆரத்தி ஆகியன நடந்தன. ஏற்பாடுகளை, கருப்பூர் இஸ்கான் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.