பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
02:07
தாம்பரம்:கிழக்கு தாம்பரம், ஜகத்குரு பதரீ சங்கராச்சாரிய சன்னிதான, கிளை மடத்தில் நிர்மானிக்கப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று (ஜூலை 4ல்.,)வெகு விமரிசையாக நடந்தது.
ஜகத்குரு பதரீ சங்கராச்சாரிய சன்னிதானத்தின் கிளை மடம், கிழக்கு தாம்பரம், அகஸ்தியர் தெருவில் அமைந்துள்ளது. அங்கு, ராமபக்த ஆஞ்சநேயர் ஆலயம் நிர்மானிக்கப்பட்டது. அதில், ஒன்பது அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அக்கோவிலின் பிரதிஷ்டா பிரம்ம கும்பாபிஷேகம், நேற்று (ஜூலை 4ல்.,) விமரிசையாக நடந்தது.இதை முன்னிட்டு, 3ம் தேதி யாகசாலை வளர்க்கப்பட்டு, மகா கணபதி பூஜை, பிரம்பசுத்தி ஹோமம், வாஸ்து ஹோமம், சக்தி ஹோமம், ராம பக்த ஆஞ்சநேய பிரதிஷ்டா ஹோமம் ஆகியவை அரங்கேறின.
கும்பாபிஷேக நாளான நேற்று (ஜூலை 4ல்.,) அதிகாலை, அஷ்ட பந்தன சம்யோஜனை, கலச ஹோமம், யாத்ரா தானம், கடப் புறப்பாடு நடந்தது.காலை, 9:15 மணிக்கு, சன்னிதான ஆச்சாரியர் கிருஷ்ணானந்த மகாசுவாமி முன்னிலையில், பிரம்ம கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மகா அபிஷேகம், மங்கள ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீகாரியம் எம்.சந்திர மவுலீஸ்வரன் செய்திருந்தார்.
கும்பாபிஷேகம் குறித்து, சன்னிதானத்தினர் கூறியதாவது:ஆலங்குடியில் உள்ள, எங்கள் சன்னிதானத்தில், 33 அடி உயர, ராம பக்த ஆஞ்சநேயர் சிலை நிர்மானிக்கும் திருப்பணி நடந்து வருகிறது.அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதம், மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன் முன்னோட்டமாகவே, இந்த ஒன்பது அடி உயர, ராம பக்த ஆஞ்சநேயர் சிலை, ஸ்தாபி தம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.