துவாபரயுகம் முடிவுக்கு வந்து கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய சமயம், லோகத்திலே துஷ்ட அரசர்களாக அசுரசக்திகள் தலைதூக்கின. பூமாதேவியால் அந்த பாவ பாரத்தைத் தாங்க முடியவில்லை. அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பில் பிரம்மாவும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்தனர். பகவானும் கிருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த சமயத்திலே தன்னுடைய முறையீடு பகவானுடைய மனசைத் தொட்டு இறக்கி அவரை வரும்படிச் செய்வதற்காக பிரியத்திற்கும், பரிவுக்கும் உரிய தாயான கோமாதா (பசுவின்) வடிவில் இருந்தால் தான் முடியும் என்பதால், பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக் கொண்டு போனாள் என்று புராணக்கதைஇருக்கிறது. அதற்கேற்பத்தான் பகவானும் கோபாலானாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் பசுக்களோடு உறவாடினார். பசுக்களுக்கும் அவரிடத்தில் அதே போல அலாதி அன்பு. வேணுகோபாலனாக இடது பாதத்தைப் பூமியில் ஊன்றிச் செங்குத்தாக வைத்துக் கொண்டிருக்கும்போது, தாமரை மாதிரியான அவருடைய உள்ளங்காலை ஒரு பசு நக்கிக் கொண்டிருக்கும். சித்திரங்களில் இப்படியே போடப்பட்டிருக்கும். இதிலிருந்து, பசுக்களின் மீது பகவானுக்கு எத்தனை ப்ரீதி(அன்பு) என்பதை தெரிந்து கொள்ளமுடியும்! -சொல்கிறார்.