பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
02:07
ஊத்துக்கோட்டை: எல்லையம்மன் கோவிலில் நடந்து வரும் கிராம திருவிழாவில், வரும், 28ம் தேதி, பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி கிராமத்தில் உள்ளது, எல்லையம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம், தீ மிதி திருவிழா நடைபெறும்.
இந்தாண்டு, 19ம் தேதி, கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 20ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் (ஜூலை., 21ல்), காலை, 10:00 மணிக்கு கூழ் ஊற்றுதல், கரகம் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று (ஜூலை., 21ல்), காலை, 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. வரும், 26ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல், 28ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்பர்.