பதிவு செய்த நாள்
07
ஆக
2019
01:08
காவிரி பாயும் திருத்தலங்களில் கொண்டாடப்படும் திருவிழா ஆடிப்பெருக்கு. இதை ஆடிப்பதினெட்டு, பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வர். காவிரி அன்னையை வழிபட்டு எந்த செயலில் ஈடுபட்டாலும், அது பெருகும் என்பதால் ’ஆடிப்பெருக்கு’ என பெயர் வழங்கப்படுகிறது.
’பெருக்கு’ என்பது பெருகுவதைக் குறிப்பதாகும். மழைக் காலத்தின் தொடக்கம் ஆடி மாதம். ஆனியின் பிற்பகுதியில் தென்மேற்குப் பருவக்காற்று வலுவாகி பருவ மழை தொடங்கும். இந்த மழை ஆடியில் வலுவடையும். இதனால் காவிரி மற்றும் அதன் துணைநதிகளில் வெள்ளம் பாய்ந்தோடும். காவிரி போலவே தென்பெண்ணை, தாமிரபரணி நதிகளிலும் ஆடிப்பெருக்கு நடக்கிறது.
சித்திரை, வைகாசி மாதங்களில் கோடை வெயிலால் வறண்ட காவிரி, தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதும் புதுப் பொலிவுடன் இருக்கும். கொங்கு மண்டலத்தில் கால் பதித்து, சோழ மண்டலத்தில் மலர்ச்சியை உருவாக்கி, பூம்புகார் கடலில் சங்கமமாகிறாள் காவிரியன்னை.
ஆடியில் ஓடும் புது தண்ணீரைக் கொண்டே நெல் சாகுபடி தொடங்குகிறது. ஆடியில் விதைத்தால் தான், தையில் அறுவடைக்கு தயாராகலாம். அதற்காக காவிரியை வணங்கி வரவேற்பதே ஆடிப்பெருக்கு விழா.
மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, குளித்தலை, முக்கொம்பு, திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு விழா களை கட்டும். கரிகாற்சோழன் காலத்தில் ’ஆடிப்பெருக்கு’ கொண்டாடப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. சோழ மன்னர்கள் காலத்தில் காவிரியில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு ஓடிக் கொண்டிருக்கும்.
இதனால் ’தட்சிண கங்கை’ என்ற சிறப்பு பெயரும் இதற்குண்டு. அதாவது தெற்கே ஓடும் புனிதமான கங்கை தான் காவிரி என்பது இதன் பொருள். இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. ’காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும்’ என ராமபிரானுக்கு வசிஷ்டர் சொல்லியதால் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் காவிரியில் நீராடினார் என்றும், அந்த நாளே ஆடிப் பெருக்கு என்றும் ஒரு தகவல் உண்டு. 18 என்ற எண்ணிற்கும் ஆன்மிகத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. மகாபாரதப் போர் நடந்த நாட்கள் 18. இந்த போர் ஆடி முதல் நாள் தொடங்கி ஆடி 18ல் முடிந்ததாகச் சொல்வர். போரில் வெற்றி பெற்ற பஞ்சபாண்டவர்கள் ஆடிப்பெருக்கன்று காவிரியில் நீராடி போரில் ஏற்பட்ட கொலைப்பாவத்தைப் போக்கி கொண்டனர்.
18 வயது என்பது பெண்கள் திருமணத்தை எதிர்கொள்ளும் பருவம். காவிரிநதியும் ஒரு பெண் அல்லவா? பொங்கியோடும் இந்த ஆடிப்பெருக்கு நாளில் அவள் பூரண நங்கையாக மிளிர்கிறாள். இது முழுக்க முழுக்கப் பெண்களுக்கான விழா. ஆண்களை விட பெண்கள் கூட்டம் தான் காவிரி கரையில் அதிகம் இருக்கும். ’கணவர் உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழ வேண்டும்... தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை மணமான பெண்கள் வேண்டுவர். மணம் ஆகாத கன்னிப் பெண்களும் திருமண வரம் வேண்டி பிரார்த்திப்பர். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத்தாலிக்கயிறு மாற்றுவர். வயது முதிர்ந்த சுமங்கலி பெண்கள் புதுக்கயிறு எடுத்துத் தருவர். அத்துடன் திருமணநாளில் சூடிக் களைந்த பூமாலைகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவிரி அன்னையை மனதில் தியானித்து பெண்கள் தங்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கைகளிலும் மஞ்சள் கயிறை கட்டிக் கொள்வர். சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிச்சாதம், தயிர் சாதம் போன்ற உணவுகளை படையல் இடுவர். தேங்காய் உடைத்து, தீபாராதனை செய்வர். அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, பூக்கள் முதலியவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழை மட்டையில் தீபம் ஏற்றி மிதக்க விடுவர்.
ஆடிப்பெருக்கில் ஸ்ரீரங்கம் பெருமாள், தன் தங்கையான காவிரிக்கு சீர் கொடுப்பதை முன்னிட்டு, குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்கள் சகோதரிகளுக்கு சீர் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்ட மக்கள் இதை பின்பற்றுகின்றனர். சுபவிஷயங்கள் தொடங்க ஏற்ற நாள் ஆடிப் பெருக்கு. ஆடி 18 ம் நாளில் எந்த நட்சத்திரம், திதி வந்தாலும் கவலை வேண்டாம். அன்றைய தினம் புதிய தொழில், முயற்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை தாராளமாக தொடங்கலாம். இந்நாளில் தொடங்கும் நற்செயல்கள் பலமடங்கு பெருகி நன்மையளிக்கும். இந்நாளில் வங்கிக் கணக்குகள், சேமிப்புக் கணக்கு வீட்டுக்குத் தேவையான ஜவுளிகள், நகைகள், இதர பொருட்கள் வாங்க ஏற்ற நாள். மங்களப் பொருட்களான மஞ்சள், குங்குமம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றையும் வாங்கலாம்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. பாரம்பரியத்தைக் குறிப்பவர் சூரியபகவான். பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் பாரம்பரிய விழாவே. ’சந்திரன்’ என்றாலே குளிர்ச்சி நிரம்பியவர். நதிகளைக் குறிக்கக் கூடிய கிரகம். கலைகளுக்கு அதிபதி புதன். சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்ற உணவுகள் படைப்பது இவருக்கு சிறப்பு. ஆடிப்பெருக்கன்று இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மனித உயிர்களுக்கும், ஜீவாதாரமான பயிர்களுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. காவிரி வழிபாட்டால் சூரிய, சந்திர, புதபகவானின் அருளாசி பூரணமாகக் கிடைக்கிறது. ஆடிப்பெருக்கு வழிபாட்டால் திருமணப்பேறு, குழந்தைப் பேறு கிடைக்கும். ஐஸ்வர்யம் சேரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். நாட்டில் நீர்வளம் பெருகும். ஆடிப்பெருக்கன்று காவிரியை வணங்கி நல்வாழ்வு பெறுவோம்!