பதிவு செய்த நாள்
08
ஆக
2019
11:08
அலங்காநல்லுார் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு தங்கக்கொடிமரம் நாணல் புல், மாவிலை, பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து நுாபுரகங்கை தீர்த்தத்தால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோயில் யானை சுந்தரவள்ளி தும்பிக்கையை துாக்கி பிளிற பக்தர்கள் கோவிந்தா கோஷங்களை எழுப்பினர். பின் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து திருத்தேர் முன் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.இன்று(ஆக., 8) இரவு சிம்மவாகனம், ஆக., 9 அனுமார் வாகனம், 10ல் கருடவாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கும். . ஆக., 11 காலை 6:30 மணிக்கு உற்ஸவர் பெருமாள் மறவர்மண்டபத்தில் அருள்பாலிப்பார்.
12 ல் காலை தங்கப் பல்லக்கு, இரவு யானைவாகனம், 13 ல் இரவு புஷ்ப சப்பரம், 14 ல் இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார். முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ஆக.,15 நடக்கிறது. ஆக., 16 தீர்த்தவாரி, 17ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.