பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
கிணத்துக்கடவு:நெகமம் அய்யன் கோவிலில், பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.நெகமம் அய்யன் கோவில் வளாகத்தில், பொன்னர் சங்கர் திருக்கல்யாண நிகழ்ச்சி மங்கள இசையுடன் துவங்கியது.திருவிளக்கு பூஜை, உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், அண்ணன்மார் கதையில் பொன்னர்-சங்கர் வழிபாட்டு கதை உடுக்கை அடி பாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த கிராமிய கதைப்பாட்டு கலைஞர்கள் சீத்தாராமன், சிவக்குமார், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு உடுக்கையடித்து கிராமிய கதையை பாடலாக பாடி நடித்தனர்.
மேலும், பொன்னர் சங்கர், பச்சாயி, பவளாயி, திருக்கல்யாண பூர்வாங்க பூஜைகள் செய்யப் பட்டு, வேதபாராயணம், திருமுறைப்பாராயணம், புண்ணியாகவாசனம், திருமாங்கல்ய தாரணம், பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.பெரிய காண்டியம்மன் தபசு, தாமரை தபசு, பொன்னர்- சங்கர், அருக்காணி நல்லதங்காள் பிறப்பு நடந்தது. இதனை தொடர்ந்து, பொன்னர்-சங்கர் திருக்கல்யாணம் நடந்தது.இதில், பொன்னர்- சங்கர் உருவாரம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்; அன்னதானம் வழங்கப் பட்டது.